

சண்டிகர்,
நாடு முழுவதும் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. டெல்லி சீலாம்பூர், ஜாப்ராபாத் பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
நடிகை பரினீதி சோப்ரா இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டதற்காக, அவரை குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், குழந்தைகளை காப்போம் என்ற அரசு திட்டத்தின் விளம்பர தூதர் பதவியில் இருந்து நீக்கி விட்டனர் என காங்கிரஸ் நிர்வாகியான ரந்தீப் சிங் சுர்ஜிவாலா டுவிட்டரில் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த தகவல் தவறானது என்று அரியானா அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மறுப்பு தெரிவித்து உள்ளது.
இது பொய்யானது, அடிப்படையற்றது. இத்தகவலை பல ஊடகங்களும் ஆராயாமல் பகிர்ந்துள்ளது. உண்மையை பற்றி ஆராயாமல் இதுபோன்ற தகவல்களை பரப்புவதில் இருந்து ஒவ்வொருவரும் விலகி இருக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டது.
உண்மை என்னவெனில், கடந்த 2016-ம் ஆண்டு மே மாதத்தில் அரியானா அரசு, நடிகை பரினீதி சோப்ராவை புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியே பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம், பெண் குழந்தைகளை காப்போம் என்ற திட்டத்தின் கீழ் விளம்பர தூதராக நியமித்தது. ஒரு வருடத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்து விட்டது என தெரிவித்து உள்ளது.