ஆந்திரா அமைச்சரவை விரிவாக்கம்: மந்திரி ஆகிறார் நடிகை ரோஜா

நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிற்கு புதிய அமைச்சரவையில் மந்திரி பதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா அமைச்சரவை விரிவாக்கம்: மந்திரி ஆகிறார் நடிகை ரோஜா
Published on

ஆந்திரா:

ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தபோது நகரி எம்எல்ஏ ரோஜாவிற்கு மந்திரி பதவி உறுதி என்று பேசப்பட்டது. ஆனால் அவர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். அப்போது அவருக்கு வாய்ப்பு தரப்படும் என உறுதியளித்ததாக பேசப்பட்டது.

தற்போது நான்கு மாதங்கள் தாமதமாக அமைச்சரவை விரிவாக்க பணியை ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டார். இதையடுத்து கடந்த வாரம் அனைத்து அமைச்சர்களின் ராஜினாமா களை ஜெகன்மோகன் ரெட்டி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே இருந்த மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து நகரியில் தொண்டர்கள் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலை அருகிலும் நகரியில் உள்ள ரோஜாவின் வீட்டின் அருகிலும் கட்சி அலுவலகத்தின் முன்னும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

புதிதாக நியமிக்கப்படவுள்ள அமைச்சர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி சுயமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு இத்தகவலை தெரிவித்ததாக அவரது அரசியல் ஆலோசகர் சஜ்ஜல ராம கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயர்களையும் அவர் தெரிவித்தார்.

அதில் நகரி எம் எல் ஏ நடிகை ரோஜா உட்பட 25 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அமைச்சரவை திங்கட்கிழமை 11:30 மணி அளவில் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் 70% பேர் பி.ஸி, எஸ்.ஸி, எஸ்.டி, மைனாரிட்டி வகுப்பைச் சேர்ந்தவர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com