தமிழ்நாடு, கேரளம் உள்பட பா.ஜ.க.ஆட்சி அல்லாத மாநிலங்களில் அதானி ரூ.5 லட்சம் கோடி முதலீடு

அதானி குழுமத்தின் கணிசமான முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டிலும் ஈர்க்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளம் உள்பட பா.ஜ.க.ஆட்சி அல்லாத மாநிலங்களில் அதானி ரூ.5 லட்சம் கோடி முதலீடு
Published on

புதுடெல்லி,

பா.ஜ.க. ஆட்சி செய்​யாத மாநிலங்​களி​லும் ரூ.5 லட்​சம் கோடிக்கு முதலீடு செய்​வதற்​கான திட்​டங்​களை அதானி குழு​மம் தயார் செய்​துள்​ளது.

பா.ஜ.க.வும், அதானி குழுமமும்

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமாக அதானி குழுமம் உள்ளது. அதானிக்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அதிகளவில் ஆதரவுக்கரம் நீட்டி சலுகை காட்டி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைக்கும் முதன்மையான குற்றச்சாட்டு என்னவென்றால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, அதானி குழுமத்திற்குச் சாதகமாகச் சில கொள்கைகளை வகுக்கிறது என்பதாகும். இதனால் பா.ஜ.க. ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அந்த நிறுவனத்தின் முதலீடு குவிந்து வருவதாக விமர்சித்தனர்.

இருப்பினும் பா.ஜ.க. கட்சி அல்லாத மாநிலங்களில் தனது தொழில் முதலீடுகளை அதானி குழுமம் விரிவுபடுத்தி வருகிறது. இதனால் அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பது தற்போதைய பொருளாதார நிலவரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் கோடி

காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சாலைகள், துறைமுகங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்டு மற்றும் தரவு மையங்கள் என சுமார் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த அந்த குழுமம் ஆர்வம் காட்டி வருகிறது. பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க மாநில அரசுகள் தனியார் முதலீடுகளை ஈர்க்க முயற்சிப்பதால், இந்த முதலீட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கர்நாடகா, கேரளா, தெலுங்கானா

கர்நாடகாவில் பெங்களூருவில் ஹெப்பால் மற்றும் சென்டிரல் சில்க் போர்டு இடையிலான சுரங்கப்பாதை சாலை திட்டத்துக்கு அதானி நிறுவனம் குறைந்த பட்ச ஏலதாரராக உள்ளது.

கேரளாவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தின் 2-ம் கட்ட பணிகளுக்காக ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுகிறது. அங்கு திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கொச்சியில் ரூ.600 கோடி மதிப்பிலான தொழிற்பூங்காவையும் அதானி குழுமம் நிர்வகிக்கிறது.

தெலுங்கானாவில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், ஜார்கண்டில் 1,600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை ஏற்கனவே இயக்கி வருகிறது. இமாசலபிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகளுக்கான வினியோக சங்கிலி மற்றும் சிமெண்டு தொழிலிலும் குழுமம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில்...

தி.மு.க. மற்றும் தற்போது த.வெ.க. ஆகிய கட்சிகளால் தமிழ்நாடு ஆளப்படும் நிலையில் இவ்விரு கட்சிகளும் காங்கிரசுடன் கூட்டணி கட்சிகளாகும். இருப்பினும் அதானி குழுமத்தின் கணிசமான முதலீட்டுத் திட்டங்கள் தமிழ்நாட்டிலும் ஈர்க்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டுமுதல் ரூ.42,700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்த குழுமம் அறிவித்துள்ளது.

ரூ.2,511 கோடி நிதி ஏலம்

மேலும் சென்னை வெளிவட்டச்சாலையின் இயக்கம், பராமரிப்பு மற்றும் சுங்க வசூல் உரிமத்தை ரூ.2,511 கோடி நிதி ஏலத்தின் மூலம் பெற்றுள்ளது. அரசியல் எல்லைகளைக் கடந்து, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவாக செயல்படுத்தும் திறனை அடிப்படையாகக் கொண்டு இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதானி குழுமம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது என்ற விவாதம் தவறானது என்பதை இந்தத் தரவுகள் நிரூபிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com