மேற்கு வங்கத்தில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமனம் - தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பான, அமைதியான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்ய கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்களை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

1. மேற்கு வங்க சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026-ன் தொடர்ச்சியாக, வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளைப் பலப்படுத்தவும் கண்காணிக்கவும், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களுக்கு உதவ 165 கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களையும், 77 காவல் பார்வையாளர்களையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

2. வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் பாதுகாப்பான, அமைதியான, அச்சமற்ற மற்றும் வெளிப்படையான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக இந்தக் கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3. இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 20B ஆகியவற்றின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இக்காலக்கட்டத்தில், இந்தப் பார்வையாளர்கள் ஆணையத்தின் பணி ஒதுக்கீட்டில் இருப்பதாகக் கருதப்படுவார்கள் மற்றும் ஆணையத்தின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவார்கள்.

4. ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை அரங்குகளைக் கொண்டுள்ள 165 சட்டப்பேரவைத் தொகுதிகளில், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக கூடுதல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

5. காவல் பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு ஏற்பாடுகளைக் கண்காணிப்பார்கள். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இருப்பதை உறுதி செய்வார்கள். இருப்பினும், காவல் பார்வையாளர்கள் எந்தச் சூழ்நிலையிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் வாக்கு எண்ணிக்கை அரங்கிற்குள் நுழையக்கூடாது.

6. காவல் பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள பிற தேர்தல் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுவார்கள்.

7. தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களுக்கான அடையாள அட்டைகள், தேர்தல் நடத்தும் அலுவலரால் ECINet-ல் உள்ள பிரத்யேக தளம் மூலம் வழங்கப்படும்.

8. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் நுழைவது, ECINet மூலம் வழங்கப்பட்ட QR குறியீடுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

9. வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேறு எவரும் வாக்கு எண்ணிக்கை அரங்கிற்குள் கைபேசி கொண்டு செல்ல அனுமதியில்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

10. கட்டுப்பாட்டு கருவிகளிலிருந்து (Control Units) பெறப்படும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளைக் கொண்ட படிவம் 17C-II, வாக்கு எண்ணிக்கை முகவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களால் தயார் செய்யப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முகவர்களின் கையொப்பத்திற்காக அவர்களிடம் பகிரப்படும். முகவர்கள் விரும்பினால் இந்த நடைமுறை மீண்டும் செய்யப்படும்.

11. ஒவ்வொரு மேசையிலும் நியமிக்கப்பட்டுள்ள நுண் பார்வையாளர்கள், கட்டுப்பாட்டுக் கருவியின் திரையில் தோன்றும் முடிவுகளைத் சுயாதீனமாக குறித்துக்கொண்டு, ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் குறுக்குச் சரிபார்ப்பிற்காக வாக்கு எண்ணிக்கை பார்வையாளரிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com