

புதுடெல்லி,
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த விசாரணையின்போது கேரள அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா வாதங்களை முன்வைத்தார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி, முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் உத்தரவுகளை இருமாநில அரசுகளும் பின்பற்றுவதில்லை என புகார் தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு குழுவின் உத்தரவை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில தலைமைச்செயலர் கோர்ட்டு அவமதிப்புக்கு பொறுப்பாக்கப்படுவார். மேலும் கண்காணிப்பு குழுவுக்கான கூடுதல் அதிகாரமும் வழங்கப்படும்.
கண்காணிப்பு குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக கேரளா மற்றும் தமிழக அரசுகள் கூடி ஆலோசனை நடத்த வேண்டும். முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்பு குழுவுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பது தொடர்பாக கேரளா மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை சுப்ரீம் கோர்ட்டில் வருகிற செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்யவும் தமிழக மற்றும் கேரள அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.