'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று இறுதி சுற்றுவட்டப்பாதையை அடைகிறது

சூரியனின் செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்யப்படும்.
'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று இறுதி சுற்றுவட்டப்பாதையை அடைகிறது
Published on

பெங்களூரு,

சூரியனை ஆய்வு செய்வதற்காக, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி 'ஆதித்யா-எல்1' விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 63 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகளில், நீள்வட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, விண்கலம் சூரியனை நோக்கி பயணத்தை தொடர்ந்தது. அதன் பயணத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், 'ஆதித்யா-எல்1' விண்கலம் இன்று அதன் இறுதி இருப்பிட சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து 'இஸ்ரோ' அதிகாரிகள் கூறியதாவது:-

'ஆதித்யா-எல்1' விண்கலம், இன்று மாலை சுமார் 4 மணிக்கு அதன் இறுதி இருப்பிடமான லாக்ராஞ்ச் பாயிண்ட் 1-ஐ சுற்றியுள்ள 'ஹாலோ' சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அந்த இடம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ளது.

அந்த இடம், எந்த கிரகணமும் குறுக்கிடாமல் சூரியனை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் வகையில் வசதியான இடம் ஆகும். சூரியனின் செயல்பாடுகளையும், விண்வெளி வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆய்வு செய்யப்படும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும். அந்த இடத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தாவிட்டால், அது தொடர்ந்து பயணிக்கும். சூரியனை நோக்கி கூட செல்லக்கூடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com