

லக்னோ,
குடியரசு தினத்தன்று விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி அமைப்புகள் இணைந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் நகரில், திரங்கா என்ற பெயரில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தின. பேரணியின் போது ஒரு தரப்பினர், கற்களை வீசியதாகச் சொல்லப்படுகிறது. பதிலுக்கு பேரணியில் ஈடுபட்டவர்களும் கற்களை வீசித் தாக்க, சிலர் துப்பாக்கிகளை எடுத்துச் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதில் சந்தன் குப்தா என்ற இளைஞர் கொல்லப்பட்டதுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர் உயிரிழந்தை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் வன்முறை மூண்டது. கடைகளை அடித்து நொறுக்கிய வன்முறைக் கும்பல், சாலையில் இருந்த பொருட்களையும் சூறையாடி தீ வைத்தனர். சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டன.
இதை அடுத்து வன்முறை நடந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, மேலும் வன்முறை பரவாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கப்பட்டனர். அம்மாவட்ட போலீஸ் எஸ்.பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஸ்கஞ்ச் வன்முறை குறித்து உத்தர பிரதேச பாஜக மூத்த தலைவர்களும் சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதனால், ஆளும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் நெருக்கடியை இந்த விவகாரம் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த கலவரம் தொடர்பாக முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, ஒவ்வொரு குடிமகனுக்கும் பாதுகாப்பு வழங்குவதில் எங்கள் அரசாங்கம் உறுதியுடன் உள்ளது. மாநிலத்தில் வன்முறைக்கு இடம் கிடையாது என்றார். இதற்கிடையே, இந்த வன்முறை தொடர்பாக அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.