

கோரக்பூர்,
பத்மாவதி படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து மானத்தை காப்பாற்ற 12 ஆயிரம் பெண்களுடன் தீயில் இறங்கி உயிர் நீத்தவர் ராணி பத்மினி. ஆனால் பத்மாவதி படத்தில் அலாவுதீன் கில்ஜியை, ராணி பத்மினி காதலிப்பதுபோல் தவறாக காட்சிப்படுத்தி உள்ளனர் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். ராஜஸ்தான், உத்தரபிரதேச அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது.
பத்மாவதி திரைப்பட சர்ச்சை விவகாரம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இயக்குநர் பன்சாலி பொதுமக்களின் உணர்வுகளுடன் விளையாடும் பழக்கம் கொண்டவர் என விமர்சனம் செய்து உள்ளார்.
யோகி ஆதித்யநாத் பேட்டியளித்து பேசுகையில், பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் மாநில அரசு படத்தை வெளியிட அனுமதிக்காது. யாருக்கும் சட்டத்தை தங்களுடைய கையில் எடுக்க உரிமை கிடையாது, சஞ்சய் லீலா பன்சாலி அல்லது யாராக இருந்தாலும் சரி. நடிகர்களுக்கு மிரட்டல் விடுப்பவர்கள் குற்றம் புரிந்தவர்கள், அவர்களுக்கு இணையாக பன்சாலியும் குற்றம் புரிந்து உள்ளார். இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இருதரப்புக்கு எதிராகவும் எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் மற்றொருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் நல்ல எண்ணம் மற்றும் நோக்கம் இருந்தால் சமூதாயத்தில் நல்லுறவு வளரும் என கூறிஉள்ளார்.