

லகனோ,
உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தாய் சாவித்திரி தேவி (வயது 91) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
உத்தரகண்ட் மாநிலம், பெளரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பூர்வீக இல்லத்தில் வசித்து வந்த சாவித்திரி தேவி, வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், பௌரி கர்வாலில் உள்ள பூர்வீக இல்லத்தில் இன்று காலை 11.50 மணியளவில் சாவித்திரி தேவி காலமானார்.
உத்தரகண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பஞ்சூர் (Panchur) கிராமத்தில் அவர் உயிரிழந்தார்.
இதனை பவுரி கர்வால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர்வேஷ் பன்வார் உறுதிப்படுத்தினார். மேலும், உயிரிழந்த சாவித்திரி தேவியின் குடும்பத்தினருடன் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சாவித்திரி தேவியின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (நவம்பர் 21) ஹரித்வாரில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்,
உத்தரப் பிரதேசத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் தாயார், சாவித்ரி தேவி மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது.
தாயின் அன்பு, ஆசிகள் மற்றும் கனிவான பாசம் ஆகியவை வாழ்வின் மிக விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும். அவரது மறைவு அந்த குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
மறைந்த அந்த ஆன்மாவுக்கு கேதார்நாத்தின் திருவடிகளில் இடமளிக்க வேண்டும் என்றும், இந்த ஆழ்ந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை யோகிக்கும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்றும் கேதார்நாத்திடம் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.