பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் மீது தொடரப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை குறித்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போப்டே மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாட்டை விமர்சித்து சமூக செயற்பாட்டாளரும் மற்றும் மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டார். இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த 20-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது தன்னுடைய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறி பிரசாந்த் பூஷண் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். பின்னர் பிரசாந்த் பூஷண் தரப்பில் நேற்று முன்தினம் மீண்டும் ஒரு கூடுதல் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையிலும் அவர் மன்னிப்பு கோருவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தனிப்பட்ட முறையில் ஆஜராகி சில கருத்துகளை கூறினார்.

அவர் கூறுகையில், பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் தெரிவித்த கருத்துகள் கோர்ட்டு சீர்திருத்தம் குறித்து பேசுகின்றன. நீதி மற்றும் நிர்வாக முறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமைந்துள்ளன. ஒருவேளை அவதூறாக இருக்கும் பட்சத்தில் அவரை எச்சரித்து விட வேண்டுமே தவிர அவருக்கு தண்டனை எதையும் வழங்க கூடாது. அவரை கோர்ட்டு மன்னிக்க வேண்டும். இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு கருணையுடன் அணுக வேண்டும். அவ்வாறு செய்தால் சுப்ரீம் கோர்ட்டின் நன்மதிப்பு பலமடங்கு உயரும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நீதிபதி அருண் மிஸ்ரா, பிரசாந்த் பூஷண் தன்னுடைய தவறை உணர்ந்ததாக தெரியவில்லை. அவர் மன்னிப்பு கடிதம் எதையும் கொடுக்கவும் இல்லை. அவருடைய கூடுதல் மனுவிலும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கூறியிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த வேணுகோபால், அவருடைய கருத்தை மறுபரிசீலனை செய்வதற்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். இந்த வழக்கில் காலம் இன்னும் கடந்து விடவில்லை என்று கூறினார். அதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா, அப்படியானால் பிரசாந்த் பூஷணுக்கு மேலும் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்குகிறோம். அதற்குள் அவர் தனது நிலைப்பாட்டை வேண்டுமென்றால் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்.

ஆனால், 30 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நீதிமன்றம் கூடியபோதும், பிரசாந்த் பூஷண் தன்னுடைய கருத்தில் தான் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும், மன்னிப்பு கோரமாட்டேன் என்றும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ஆஜரான அனைவருக்கும் நன்றி தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் மீதான தீர்ப்பை (தண்டனை விவரம்) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

முன்னதாக இந்த வழக்கில் பிரசாந்த் பூஷணுக்கு என்ன விதமான தண்டனை கொடுக்க முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண் தரப்பு மூத்த வக்கீல் ராஜீவ் தவன், கோர்ட்டு அவரை தண்டிக்க விரும்பினால் அவரை வழக்குகளில் ஆஜராவதற்கு தடை விதிக்க முடியும். மேலும், கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழும் தண்டிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com