அரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி

ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று வக்கீல் தேவராஜ் கூறினார்.
அரசியலில் இருந்து ரேவண்ணா குடும்பத்தை வெளியேற்ற வேண்டும்; வக்கீல் தேவராஜ்கவுடா பேட்டி
Published on

பெங்களூரு:

ரேவண்ணா குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது தான் எனது நோக்கம் என்று வக்கீல் தேவராஜ் கூறினார்.

நான் பயப்படவில்லை

பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ய கோரி வக்கீல் தேவராஜ் கவுடா என்பவர் மனு தாக்கல் செய்தார். அதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணாவை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ஏ.மஞ்சுவும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து வக்கீல் தேவராஜ் கவுடா கூறியதாவது:-

பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இது சாதாரண, நேர்மையான வக்கீலுக்கு கிடைத்த வெற்றி ஆகும். எனக்கு அழுத்தங்கள் வந்தன. மிரட்டலும் வந்தன. ஆனால் அவற்றுக்கு எல்லாம் நான் பயப்படவில்லை. பிரஜ்வல் ரேவண்ணாவின் அனைத்து தவறுகளுக்கும் உரிய ஆவணங்களை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தேன்.

உயிருக்கு ஆபத்து

யார் தவறு செய்தாலும் அவற்றுக்கு எதிராக போராடினால் நீதி கிடைக்கும் என்று நான் கருதினேன். ரூ.23 கோடி சொத்து விவரங்களை அவர் மறைத்தார். வருமான வரியை சரியாக செலுத்தாமல் ஏமாற்றினார். இதை நாங்கள் நிரூபித்தோம். தேர்தலில் நிற்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு சொல்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருந்தது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கினர். எனது காரின் கண்ணாடியை உடைத்தனர். வக்கீலை தொடுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

எனது நண்பர்கள், வக்கீல்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். போலீஸ் துறைக்கு நன்றி தெரிவிக்கிறேன். ரேவண்ணாவின் குடும்பத்தை அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே எனது நோக்கம். ஏனெனில் அவரால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டன, எவ்வளவு பேருக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்பது குறித்து நான் பகிரங்கப்படுத்துவேன்.

இவ்வாறு தேவராஜ்கவுடா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com