மராட்டியத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது

மராட்டியத்தில் 20 ஆண்டுக்கு பிறகு மீண்டும் சிவசேனா தலைமையில் கூட்டணி அரசு மலர்கிறது.
மராட்டியத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் கூட்டணி அரசு மலர்கிறது
Published on

மும்பை,

மராட்டியம் ஆரம்ப காலம் முதல் காங்கிரசின் கோட்டையாக இருந்து வந்தது. காங்கிரசை வீழ்த்துவதற்காக இந்துத்வாவை தீவிர கொள்கையாக கொண்ட சிவசேனாவும், பாரதீய ஜனதாவும் 1989-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கைகோர்த்தன. இரண்டு கட்சிகளும் 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையும் சேர்ந்தே சந்தித்தன. அந்த தேர்தலில் முதல் முறையாக சிவசேனா தலைமையிலான அந்த கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அக்கட்சியை சேர்ந்த மனோகர் ஜோஷியும், பின்னர் நாராயண் ரானேயும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்கள். பாரதீய ஜனதாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அக்கட்சியின் கோபிநாத் முண்டே அந்த பதவியை வகித்தார். இந்த ஆட்சி 1999-ம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தை பூர்த்தி செய்தது. இதையடுத்து நடந்த தேர்தலில் தோல்வியை தழுவிய இந்த கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு பிரச்சினை காரணமாக பாரதீய ஜனதாவுடனான 25 ஆண்டுகால கூட்டணியை சிவசேனா முறித்தது. இருப்பினும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பெரும்பான்மை இல்லாமல் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த நிலையில், மீண்டும் பாரதீய ஜனதாவுடன் நெருக்கம் காட்டி ஆட்சியிலும் சிவசேனா அங்கம் வகித்தது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்தித்த நிலையில், முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலின் பலனாக 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனா தலைமையில் மீண்டும் ஆட்சி மலருகிறது. இந்த முறை சிவசேனா கொள்கையில் முரண்பட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com