

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா 24 மணி நேர பாதிப்பு கடந்த மார்ச் மாத மத்தியில் இருந்து நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் என்று ஏறிவந்த நிலையில், 5 நாட்களுக்கு முன்பு 4 லட்சத்தை தாண்டியது.
தொடாந்து 5 நாட்களாக தினமும் 4 லட்சத்துக்கு மேல் புதிய பாதிப்பு பதிவானது. இந்தநிலையில், 5 நாட்களுக்கு பிறகு ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்துக்கு கீழே குறைந்தது.
அதன்படி, நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் புதிதாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
வழக்கம்போல், மராட்டிய மாநிலத்தில் அதிக அளவாக 48 ஆயிரத்து 401 பேர் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் 47 ஆயிரத்து 930 பேரும், கேரளாவில் 35 ஆயிரத்து 801 பேரும் கொரோனா தொற்றுக்கு இலக்காயினர்.
மேற்கண்ட 3 மாநிலங்களுடன் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, சத்தீஷ்கார், குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய 10 மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பு மட்டும் மொத்த பாதிப்பில் 73.91 சதவீதம் ஆகும்.
இத்துடன், கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 26 லட்சத்து 62 ஆயிரத்து 575 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 86 லட்சத்து 71 ஆயிரத்து 222 ஆக அதிகரித்துள்ளது. இது, 82.39 சதவீதமாக உள்ளது. தற்போது, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்து 45 ஆயிரத்து 237 ஆக உயர்ந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 16.53 சதவீதம் ஆகும்.
கொரோனாவுக்கு 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 3 ஆயிரத்து 754 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில், 572 பேரும், கர்நாடகாவில் 490 பேரும், உத்தரபிரதேசத்தில் 294 பேரும் பலியாகி உள்ளனர்.
இத்துடன், மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.09 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதுவரை 30 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்து 77 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 14 லட்சத்து 74 ஆயிரத்து 600 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.