ரெயில் பயணி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியை அடுத்து அவாத் எக்ஸ்பிரஸில் இருந்து 26 சிறுமிகள் மீட்பு

உத்தரபிரதேசத்தில் அவாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை 26 சிறுமிகளை மீட்டுள்ளது.
ரெயில் பயணி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியை அடுத்து அவாத் எக்ஸ்பிரஸில் இருந்து 26 சிறுமிகள் மீட்பு
Published on

புதுடெல்லி,

முசாப்பர்நகர் மற்றும் பாந்த்ரா இடையிலான அவாத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்5 பெட்டியில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர், சிறுமிகள் அழுதுக்கொண்டிருப்பது தொடர்பான தகவலை ரெயில்வேக்கு டுவிட்டரில் தெரிவித்தார். இதனையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை மேற்கொண்ட நடவடிக்கையில் 26 சிறுமிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட சிறுமிகளுக்கு 10 முதல் 14 வயது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டுவிட் தொடர்பான செய்தி கிடைத்ததும் லக்னோ மற்றும் வாரணாசியை சேர்ந்த ரெயில்வே அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

சிறுமிகளை அழைத்துவந்த இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர், அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ரெயிலில் பயணம் செய்த சிறுமிகள் அழுதுக்கொண்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து பயணி ஒருவர் தகவலை வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் பாதுகாப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் வெளியாகவில்லை. போலீஸ் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு போலீஸ் விசாரணையை மேற்கொள்கிறது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுமிகள் பீகார் மாநிலம் மேற்கு சாம்ராண் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பயத்தில் இருக்கும் சிறுமிகள் மேற்படி தகவல்கள் தொடர்பாக பேசவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிறுமிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவும் ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com