

புதுடெல்லி,
சிலர் ரூ.500 பெற்றுக்கொண்டு ஆதார் விவரங்களை கசியவிட்டு வருவதாக வெளியான ஊடகச் செய்திகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான உதாய் (யூஐடிஏஐ) மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆதார் விவரங்கள் கசிவதற்கு வாய்ப்பில்லை. அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.பொதுமக்களின் ஆதார் விவரங்களைத் திருத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதார் வைத்திருப்பவரின் விழி, விரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட சில விவரங்களை அதிகாரிகளாலும் பார்க்க முடியாது. இந்தச் சூழலில், ஆதார் விவரங்களை கசியவிட்டு முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட முயன்றால் அவர்களைக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ், நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் ரூ.500 கொடுத்தால் விற்கப்படும் என சிலவற்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருந்தது.