பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்

வீட்டில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதாக விசாரணையில் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார்.
பஞ்சாப்: கால்வாய் அருகே போலீஸ் டிஎஸ்பி சடலம், குற்றவாளியை 48 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினர்
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள கோஜேவால் கிராமத்தைச் சேர்ந்தவர் தல்பீர் சிங் தியோல் (வயது 54). இவர் போலீஸ் அதிகாரி ஆவதற்கு முன்பு பளுதூக்கும் வீரர் மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர். அவர் ஜலந்தரில் உள்ள பஞ்சாப் ஆயுத பயிற்சி மையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணிமுடிந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளியே சென்ற தல்பீர் சிங் தியோல், வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஜுகல் கிஷோர் என்ற போலீஸ் அதிகாரி, பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஜலந்தரில் உள்ள பஸ்தி பாவா கேல் கால்வாய் அருகே சடலம் கிடப்பதைக் கண்டார். அருகே சென்று பார்த்த போது தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் தல்பீர் சிங் தியோல் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கிஷோர் தனது சக ஊழியர்களை அழைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணையை  தொடங்கினர். அருகில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

அவற்றில் ஒரு சிசிடிவி கேமராவில் தல்பீர் சிங் தியோல் ஒரு ஆட்டோவில் ஏறுவதை கண்டனர். மேலும், அருகிலுள்ள டவரில் இருந்து கால்வாய் பகுதியில் செயல்படும் மொபைல் சிக்னல்களையும் போலீசார் சோதனை செய்து ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.

ஆட்டோ டிரைவரிடம் நடத்திய விசாரணையில், தல்பீர் சிங்கை அவரது கிராமத்தில் இறக்கி விடுவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. 

இது குறித்து  போலீஸ் அதிகாரி ஸ்வபன் சர்மா கூறுகையில், 'தல்பீர் சிங்கை அவரது கிராமத்தில் இறக்கிவிட டிரைவர் மறுத்ததால் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆட்டோ டிரைவர் தல்பீர் சிங் தியோலிடம் இருந்து சர்வீஸ் துப்பாக்கியை பறித்து, அவரது தலையில் சுட்டதாக  தெரியவந்துள்ளது' என்று கூறினார்.  இந்த வழக்கில் குற்றவாளியை ஜலந்தர் போலீசார் 48 மணி நேரத்தில் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com