கர்நாடகத்தில் பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.14 உயர்வு

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.14 உயர்வு
Published on: 

பெங்களூரு,

கர்நாடகத்தில் பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் லிட்டருக்கு ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது.

தயிர் விலை ரூ.14 உயர்வு

கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். பால் கூட்டமைப்புகள் சார்பிலும் பால் விலையை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் பால் விலையை லிட்டருக்கு ரூ.8 உயர்த்தி கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி நடந்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலத்தில் பால் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், பால் விலையை தொடர்ந்து தயிர் விலையும் பெரிய அளவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு லிட்டர் தயிரின் விலை ரூ.14 உயர்த்தப்பட்டுள்ளது. தயிர் விலை லிட்டருக்கு ரூ.14 உயர்த்தப்பட்டு இருப்பது கர்நாடக வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும்.

இன்று முதல் அமல்

கர்நாடகத்தில் தற்போது ஒரு லிட்டர் நந்தினி தயிரின் விலை ரூ.54 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.28-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒரே அடியாக ரூ.14 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் தயிரின் விலை ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல், அரை லிட்டர் தயிரின் விலை ரூ.28 ஆக இருந்தது. தற்போது ரூ.34 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

பால் விலையை உயர்த்திய பின்பு, நந்தினி பால் பொருட்களின் விலையை உயர்த்தும் அதிகாரம் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டு இருந்ததாகவும்,கர்நாடக பால் கூட்டமைப்பே தயிர் விலையை லிட்டருக்கு ரூ.14 உயர்த்தி இருப்பதாகவும், இந்த விலை உயர்வுக்கு நாளை (அதாவது இன்று) முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா எதிர்ப்பு

இதற்கிடையில், மாநிலத்தில் பால், தயிர் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பால், தயிர் விலை உயர்வுக்கு எதிராக பா.ஜனதா சார்பில் மண்டியா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

அதே நேரத்தில் தயிர் விலை உயர்வுக்கு மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தயிர் விலை ஒரே அடியாக இந்த அளவுக்கு உயர்த்தப்பட்டு இருப்பது ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல் ஆகும். கர்நாடக வரலாற்றிலேயே தயிர் விலை ஒரே அடியாக ரூ.14 உயர்த்தி இருப்பது முதல் முறையாகும் என தனது எக்ஸ் தள பதிவில் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

X