அரசுக்கு எதிராக போராடிய 25 பேர் பணி நீக்கம்.. ராஜினாமா செய்த 14 ஆயிரம் ஊழியர்கள்

14 ஆயிரம் சுகாதார திட்ட ஊழியர்கள் பணி விலகிய சம்பவம், சத்தீஷ்கார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் தேசிய சுகாதார திட்டத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். கடந்த மாதம் 18-ந்தேதி முதல் இந்த போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஊழியர்களை மாநில அரசு கடந்த 3-ந்தேதி பணி நீக்கம் செய்தது. இதில் சத்தீஷ்கார் பிரதேச தேசிய சுகாதார திட்ட கரமாச்சாரி சங்க தலைவர் டாக்டர் அமித் குமார் மிரி, பொதுச்செயலாளர் கவுஷ்லேஷ் திவாரி உள்ளிட்டோரும் அடங்குவர். மாநில அரசின் இந்த நடவடிக்கை சுகாதாரத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து மாநில அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தேசிய சுகாதார திட்டத்தில் பணியாற்றி வரும் 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியில் இருந்து விலகி உள்ளனர்.அதிகாரிகள், ஊழியர்கள் என 14,678 பேர் இதுவரை தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கி இருப்பதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் சுமார் 16 ஆயிரம் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் ராஜினாமா செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சத்தீஷ்கார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






