பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து மோகன்பகவத்துடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் ரத்தன் டாடா

பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துடன் ரத்தன் டாடாவும் மேடையை பகிர்ந்து கொள்கிறார். #RSS
பிரணாப் முகர்ஜியை தொடர்ந்து மோகன்பகவத்துடன் மேடையை பகிர்ந்து கொள்கிறார் ரத்தன் டாடா
Published on

மும்பை,

கடந்த மாதம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதியும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ்.நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி பங்கேற்பதற்கு, அவரது கட்சியில் இருந்தே பல்வேறு எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன. அரசியல் தரப்பில் பல்வேறு விவாதங்களை பிரணாப் முகர்ஜியின் செயல் ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், அடுத்த மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், நாடறிந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவும் கலந்துகொள்கிறார். ஆகஸ்ட் 24 ஆம் தேதி நனா பால்கர் ஸ்மிர்தி சமதி என்.ஜி ஓ சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா பங்கேற்க உள்ளதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனை அருகே சமிதி என்.ஜி.ஓ-வின் அலுவலகம் அமைந்துள்ளது. கேன்சர் நோயாளிகளுக்கு சேவை வழங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமாக சமிதி செயல்படுகிறது. சமிதி என்.ஜி.ஓவின் வளாகத்திற்கு டாடா ஏற்கனவே வருகை தந்துள்ளதாகவும், இதன் பணிகளை டாடா நன்கு அறிவார் என்றும் சமிதி அமைப்பைச்சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

எங்களின் நிறுவனர் பால்கரின் நூறாண்டு விழாவையொட்டியும், அமைப்பின் தங்க விழாவை முன்னிட்டும் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று ரத்தன் டாடாவுக்கு அழைப்பு விடுத்தோம். எங்களின் அழைப்பை ஏற்கவோ, நிராகரிக்கவோ இல்லை. எனவே, கலந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் நாங்கள் இருக்கிறோம் என்று சமிதி அமைப்பின் செயலர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த விவகாரம் பற்றி, ரத்தன் டாடாவின் நெருங்கிய உதவியாளர் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்கனவே, ரத்தன் டாடா, தனது 79-வது பிறந்த நாளன்று ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகம் சென்று மோகன் பகவத்தை சந்தித்தது நினைவிருக்கலாம். மரியாதை நிமித்தமாக இருவரும் சந்தித்தாக அப்போது கூறப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com