அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் பிரிவினைவாதிகள் கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காஷ்மீர் பிரிவினைவாதிகள் கண்டனம்
Published on

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரையை முடித்து திரும்பி வந்துகொண்டிருந்தவர்களின் பேருந்தை குறி வைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது ஆகும்.

இந்தத் தாக்குதல் குறித்து காஷ்மீர் பிரிவினைவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து காஷ்மீர் பிரிவினைவாதி தலைவர்களான சையத் அலி கிலானி, மிர்வைஸ் உமர் ஃபரூக் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "அமர்நாத் யாத்திரிகர்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் காஷ்மீரின் நீண்ட நெடும் பண்பாட்டுக்கு எதிராக உள்ளது. அமர்நாத் யாத்திரை பல நூற்றாண்டுகளாக அமைதியாக நடந்து வருகிறது. இது எதிர்காலத்திலும் தொடர்ந்து அமைதியாக நடைபெறும். தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கு எங்களின் இதயப்பூர்வ இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி கண்டனம்,

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட புனித பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அதில், உயிர் பலி ஏற்பட்ட செய்தி கேட்டும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இத்தகைய மோசமான வன்முறை செயல்களில் ஈடுபடுவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் முதல் மந்திரி ரகுபர் தாஸ் குப்தாவும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com