

மும்பை,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக, இந்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் வாக்களித்த சிவசேனா, கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால், மாநிலங்களவையில் வாக்கெடுப்பை புறக்கணித்தது.
அதோடு, குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி ஆகியவற்றை சிவசேனா தலைமை விமர்சித்தும் வருகிறது. திடீரென தன் நிலையை மாற்றியது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, குடியுரிமைச் சட்டம், சாவர்க்கரின் கருத்துகளுக்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.,யான ஹேமந்த் பாட்டீல், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.ஆர்.சி.,க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஹிங்கோலி தொகுதியின் எம்பி.யான ஹேமந்த், மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், நான் சில கூட்டங்களில் பங்கேற்க வேண்டியிருந்ததால் குடியுரிமை சட்டம் மற்றும் என்.ஆர்.சி-க்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்க முடியவில்லை.
அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மக்களவையில் இந்த விவகாரங்களுக்கு நான் ஆதரவு அளித்தேன். சிவசேனா எப்போதுமே இந்துத்வா கட்சிதான். எனவே நான் இந்த விஷயங்களை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.