

திருவனந்தபுரம்,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தை ஆதரித்து குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்தில் நேற்று பேரணி நடந்தது. பாளையம் ரத்தசாட்சி மண்டபத்தில் இருந்து தொடங்கிய பேரணியை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.
இதில் மாநில தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் தலைவர் எம்.எம்.ஹசன், மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் லதிகா சுரேஷ், கொடிக்குன்னில் சுரேஷ் எம்.பி. உள்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் போது, இந்தியாவை காப்பாற்றுவோம், அரசியல் அமைப்பு சட்டத்தை காப்போம் என்ற கோஷத்தை எழுப்பியபடி சென்றனர்.
பேரணி முடிவில், ப.சிதம்பரம் எம்.பி. பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தை கண்டித்து பேசினார்.
பின்னர் கவர்னர் மாளிகையை காங்கிரசார் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணியையொட்டி திருவனந்தபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.