

புதுடெல்லி,
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர் போன்ற ஒதுக்கீடு பிரிவுகளில் வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகளை அனுபவித்து விட்டு, பின்னர் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்க முடியாது என குஜராத் அரசு பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்டு இருந்தது.
இதை எதிர்த்து நிரவ்குமார் திலிப்பாய் மக்வானா என்பவர் குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, இடஒதுக்கீடு பிரிவு ஒன்றின் மூலம் வயது தளர்வு உள்ளிட்ட பலன்களை பெற்றவர்களை பொதுப்பிரிவில் பரிசீலிக்க முடியாது எனவும், அத்தகைய தேர்வர்கள் இடஒதுக்கீடு பிரிவை சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர் என்றும் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அப்துல் நசீர், இந்திரா பானர்ஜி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது. முடிவில், இடஒதுக்கீடு பிரிவின் மூலம் பயனடைந்தவர்கள், பொதுப்பிரிவில் விண்ணப்பிக்க முடியாது என்ற குஜராத் ஐகோர்ட்டு தீர்ப்பை நீதிபதிகள் உறுதி செய்தனர்.