அகமதாபாத் விமான விபத்து; இங்கிலாந்தை சேர்ந்த 2 பேரின் உடல்கள் மாறி வந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டன.
காந்திநகர்,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
மேலும், விபத்திற்குள்ளான விமானம் மெக்நானிநகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியின் மீது விழுந்து வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்தவர்கள் சிலர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 260 ஆக அதிகரித்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பாதியாகவோ, அல்லது முழுவதுமாகவோ எரிந்து காணப்பட்டதால், அவர்களை அடையாளம் கண்டு உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து உடல்களை அடையாளம் காண்பதற்காக, விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த டி.என்.ஏ. மாதிரிகள் மூலம் உயிரிழந்த நபர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கான பணிகளை குஜராத் சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டது.
இதன்படி 260 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனிடையே 'ஏர் இந்தியா' விமான விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயணிகளின் உடல்களும், டி.என்.ஏ. பரிசோதனையில் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 2 பேரின் உடல்கள் மாறி வந்துள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த உடல்களுடன் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் பொருந்தவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். சவப்பெட்டியில் 2 வெவ்வேறு நபர்களின் உடல் பாகங்கள் இருந்திருக்கலாம் எனவும், அதனால் டி.என்.ஏ. முடிவுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் வும்மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக 'ஏர் இந்தியா' தெரிவித்துள்ளது.






