ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு பயிற்சிகள் கட்டாயம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வழிகாட்டுதலின்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு பயிற்சிகள் கட்டாயம்: மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு
Published on: 

புதுடெல்லி,

ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஏ.ஐ., சைபர் பாதுகாப்பு பயிற்சிகள் கட்டாயம் பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு

இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகளுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) குறித்த பயிற்சிகள் இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வழிகாட்டுதலின்படி, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவரும் 'ஐ கோட் கர்மயோகி' இணையதள வாயிலாக பரிந்துரைக்கப்பட்ட பயிற்சிகளை ஆண்டுதோறும் கட்டாயம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயிற்சிகளில் அதிகாரிகளின் செயல்பாடு அவர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் பிரதிபலிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

24 பயிற்சிகள்

அதிகாரிகளின் பணிக்காலத்தின் அடிப்படையில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 24 பயிற்சிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் 6 பயிற்சிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 9 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் பெற்றவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். அவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிமுகம், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள், சைபர் பாதுகாப்பு அடிப்படைப் பயிற்சிகள் பெற வேண்டும்.

16 ஆண்டுகள் வரையிலான பணி அனுபவம் உள்ளவர்கள் இரண்டாம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொழில்நுட்ப அறிமுகம் மற்றும் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதி அமைப்பு முறைகள் குறித்த பயிற்சி அளிக்க வேண்டும். 16 முதல் 25 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் மூன்றாம் பிரிவில் வருகிறார்கள். அவர்களுக்கு சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம், சாட்.ஜி.பி.டி. போன்ற 'ஜெனரேட்டிவ் ஏ.ஐ' கருவிகளின் பயன்பாடு மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் தொடர்பான பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

உடல், மன நலன்

25 ஆண்டுகளுக்கும் மேல் பணி அனுபவம் உள்ளவர்கள் நான்காம் பிரிவில் உள்ளனர். அவர்களுக்கு முதல் 3 பிரிவில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் சேர்த்து அதிகாரிகளின் ஒருங்கிணைந்த உடல் மற்றும் மன நலன் குறித்த பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com