

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வருகிற 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் பெருமையை பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் அழைப்பையேற்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.
இதில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு சுலோவேக்கியா நாட்டை சேர்ந்த ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி கலந்து கொள்ள இருக்கிறார். இதுபற்றி இந்தியாவுக்கான சுலோவேக்கியா தூதர் ராபர்ட் மேக்சியான் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி பங்கேற்பார்.
அவர் பிரதமர் மோடி மற்றும் பிற உலக தலைவர்களை சந்தித்து பேசுவார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பானது, சுலோவேக்கியா மற்றும் இந்தியாவின் உறவுகளில் புதிய உத்வேகம் அளிப்பதுடன், புதிய கண்டுபிடிப்பு மற்றும் பொறுப்புமிக்க ஏ.ஐ. ஆகியவற்றில் நம்முடைய நட்புறவை வலுப்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இரு நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது பற்றி ஆலோசிப்பதுடன், புதிய கண்டுபிடிப்பு, தொழிற்சாலை மற்றும் நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்வார்கள்.