தோட்டத்தில் புலி உலா வருவதுபோல் ஏ.ஐ. வீடியோ வெளியீடு - வாலிபருக்கு நூதன தண்டனை

தோட்டத்தில் புலி உலா வருவதாகவும், அதனால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என்றும் ஈரண்ணா கூறியுள்ளார்.
தோட்டத்தில் புலி உலா வருவதுபோல் ஏ.ஐ. வீடியோ வெளியீடு - வாலிபருக்கு நூதன தண்டனை
Published on

பெங்களூரு,

தோட்டத்தில் புலி

கர்நாடக மாநிலம் கொப்பல்(மாவட்டம்) டவுன் பகுதியில் உள்ள காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா(வயது 25). இவருக்கு சொந்தமாக வனப்பகுதியை ஓட்டி தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்துக்கு வேலைக்கு செல்லுமாறு ஈரண்ணாவின் குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வந்தனர்.

இதை தவிர்க்க தனது தோட்டத்தில் புலி உலா வருவதுபோல் ஈரண்ணா ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் வீடியோ ஒன்றை உருவாக்கினார். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை தனது குடும்பத்தினரிடம் காட்டி, தோட்டத்தில் புலி உலா வருவதாகவும், அதனால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என்றும் ஈரண்ணா கூறியுள்ளார்.

சமூக வலைதளத்தில் பரவியது

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும் தோட் டத்தில் புலி நடமாட்டம் இருப்பதாக நம்பி இருந்தனர். இதற்கிடையே இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஈரண்ணாவின் தோட்டத்துக்கு விரைந்து வந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புலியின் கால் தடங்கள் கிடைக்காததால், ஈரண்ணாவை அழைத்து வனத்துறையினர் விசாரித்தனர்.

நூதன தண்டனை

அப்போது ஈரண்ணா தான் வேலைக்கு செல்வதை தவிர்க்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோவை போலியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக ஒப்புக்கொண்டார். இதனால் கடும் கோபமடைந்த வனத்துறையினர் போலி வீடியோவை பரப்பியதற்கும், வனத்துறை அதிகாரி களின் நேரத்தை வீணடித்ததற்கும் ஈரண்ணாவுக்கு நூதன தண்டனை விதித்தனர்.

அதாவது ஈரண்ணாவை தோட்டத்துக்கு அழைத்து சென்று கிராமமக்கள் முன்னிலையில் 50 தோப்பு கரணம் போட வைத்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் கண்டித்து அனுப்பி வைத்தனர். ஈரண்ணா தோப்புக்கரணம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com