

புதுடெல்லி
பாஜகவின் தென் மாநில கட்சிகளின் விவகாரத்தை கவனிக்கும் அந்த மூத்தத் தலைவர் அதிமுக இணைவது என்பது காலத்தைப் பொறுத்தது என்றார். அதிமுக உறுதியாக இணையும். சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். தேஜகூவில் அது இணைந்தால் இயற்கையாகவே மத்திய அரசிலும் இணையும் என்று பெயர் வெளியிட விரும்பாத அத்தலைவர் கூறினார்.
தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தி வரும் கிளர்ச்சி உட்கட்சிப் பிரச்சினையே அன்றி ஆட்சிக்கு ஆபத்தாக இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான இரு அணிகளும் இணைந்ததை பாஜக வரவேற்றுள்ளது என்றாலும் அந்த இணைப்பிற்கு பங்களிப்பு எதையும் அது செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்கும் பட்சத்தில் தேஜகூவில் இணையும் அதிமுகவிற்கும் அதில் இடம் கிடைக்கும் வாய்ப்புண்டு. தற்போது மக்களவையில் 37 உறுப்பினர்களையும், மாநிலங்கள் அவையில் 13 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது அதிமுக. குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் பாஜகவை அதிமுக ஆதரித்தது. பிகாரின் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது. இதையடுத்து அதிமுகவும் இணையவுள்ளது. இவ்விரு கட்சிகளும் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக களமிறங்கின என்றாலும் நிதிஷ் கட்சி படுதோல்வியடைந்தது; மாறாக அதிமுக 37 இடங்களை பெற்றது.