டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? நிறுவனத்தின் அடையாளம் இழக்க வழிவகுக்கும் - மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்கும் திட்டம் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை இழக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயர் மாற்றமா? நிறுவனத்தின் அடையாளம் இழக்க வழிவகுக்கும் - மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய பெயர் வைக்கும் திட்டம் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை இழக்க வழிவகுக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ ஆசிரியர்கள் சங்கம் சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லி உட்பட நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று கூறப்படுகின்றது.

அந்த வகையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர் சூட்டுவதற்காக, உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர்கள், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று மறைக்கப்பட்ட தியாகிகள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் ஆகிய பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 4 பெயர்கள் பரிந்துரைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பெயர் வைப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் புதிய பெயர் வைக்கும் திட்டம் சுகாதாரத் துறை அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்றுவதற்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பிரபலமான நிறுவனங்கள் பல நூற்றாண்டுகளாக ஒரே பெயர்களைக் கொண்டுள்ளன -(ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்கள்), புதிய பெயர் வைக்கும் திட்டம் அந்த நிறுவனத்தின் அடையாளத்தை இழக்க வழிவகுக்கும். ஆகவே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் தயவுசெய்து பரிசீலிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com