கடன் வசூல்; நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

கடனை திருப்பி வசூலிக்கும் போது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை கடைபிடிக்க வேண்டும் என்று வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மாநாட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடன்களை வசூலிக்கும் போது, வாடிக்கையாளர்கள் கண்ணியமாகவும், மரியாதையாகவும் நடத்தப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றி கடன்களை வசூலிக்க வேண்டும்.
ரூ.500 கடனை செலுத்தாதவர்களிடம் நிதி நிறுவன ஊழியர்கள் கடினமாக நடந்து கொண்டதாக பல ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. நீங்கள் உங்களின் வேலையைத் தான் செய்கிறீர்கள் என்பது தெரியும். ஆனால், மனசாட்சி இல்லாமல் செயல்படக் கூடாது.வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தற்போது வங்கிகளால் வழங்கப்படும் மொத்த கடனில் 24% மட்டுமே வழங்குகின்றன. இதை 2047ல் குறைந்தது 50% ஆக உயர்த்த வேண்டும். வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உரிய ஆதரவு அளிப்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்றார்.






