

ராஞ்சி,
நேற்று மாலை ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தபோது ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமாரியா அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த ஏழு பேரும் உயிரிழந்ததாக மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் இயக்கும் விமானம் ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் விமான ஆம்புலன்ஸில் இருந்த ஏழு பேரும் கொல்லப்பட்டனர். விமானம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. விமானம் இரவு 7.30 மணியளவில் காணாமல் போனது. சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்து பகுதியில் விபத்துக்குள்ளானது என்று சத்ரா துணை ஆணையர் கீர்த்திஸ்ரீ தெரிவித்தார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களாக கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ராஞ்சி விமான நிலைய இயக்குனர் வினோத் குமார் கூறுகையில், “விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது. விபத்திற்கு பின்னால் மோசமான வானிலை ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் உண்மையான காரணம் விசாரணைக்குப் பிறகுதான் கண்டறியப்படும்” என்று அவர் கூறினார்.
மாவட்ட நிர்வாகத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழு ஏற்கனவே சம்பவ இடத்தை அடைந்துள்ளது, மேலும் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) குழு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது