

மைசூரு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பன்னிமண்டப விளையாட்டு மைதானத்தில் விமான கண்காட்சி நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது.
இந்த ஹெலிகாப்டர் மாண்டியா மாவட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீரங்கபட்டணத்துக்கு அருகே சென்ற போது, அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானிகள், உடனே அந்த ஹெலிகாப்டரை அருகில் உள்ள அரகேர் போர் கிராமத்தில் வயலில் தரையிறக்கினர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை உயர் அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.