கொரோனா நிவாரணப் பணிகளுக்கு 24 மணி நேரமும் விமானப்படை தயார் - விமானப்படை தளபதி தகவல்

கொரோனா தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கிறது என்று பிரதமர் மோடியிடம் தலைமை தளபதி அர்.கே.எஸ்.பதவுரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு 24 மணி நேரமும் விமானப்படை தயார் - விமானப்படை தளபதி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும், வெளிநாடுகளில் இருந்தும் கொரோனா தொடர்பான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் தயார்நிலையில் இருக்கிறது. இப்பணிகளுக்காக விமானப்படையின் அதிக சரக்கு ஏற்றும் விமானங்கள் முழுவதும், மத்திய அளவில் சரக்கு ஏற்றும் விமானங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் தயாராக வைக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் விமானப்படை தலைமை தளபதி அர்.கே.எஸ்.பதவுரியா நேற்று இத்தகவலை தெரிவித்தார்.

கொரோனா தொடர்பான பணிகளில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் முகமைகளுடன் விரைந்து இணைந்து செயல்படும் வகையில், விமானப்படையில் கொரோனா ஆதரவு பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

24 மணி நேரமும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், அனைத்து வரிசை விமானங்களின் ஊழியர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என பதவுரியா கூறினார்.

விமானப்படையின் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. முடிந்த அளவு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

அப்போது பிரதமர் மோடி, ஆக்சிஜன் டேங்கர்கள் மற்றும் பிற அத்தியாவசிப் பொருட்களை எடுத்துச் செல்வதன் வேகம், அளவு, பாதுகாப்பை அதிகரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொரோனா தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள விமானப்படையினரின் பாதுகாப்பையும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

இந்த தகவல் விமானப்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com