

விமான நிறுவனங்கள் தங்களுடைய இணையதளங்களில் தைவான தனி தேசமாக குறிப்பிடக் கூடாது என்ற சீனாவின் நெருக்கடிக்கு பணிந்த விமான நிறுவனங்கள் பட்டியலில் இப்போது இந்தியாவின் ஏர்இந்தியா விமான நிறுவனமும் இணைந்துள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏர் கனடா மற்றும் பிற விமான நிறுவனங்கள் தங்களுடைய இணைதளங்களில் தைவான் என குறிப்பிடுவதை தவிர்த்துள்ளது. இப்போது அவர்கள் தைவான தனிப்பிராந்தியம் என குறிப்பிடுவதை தவிர்த்துள்ளனர். சீனாவின் விமான போக்குவரத்து அதிகாரசபையின் ஏப்ரல் 25 உத்தரவிற்கு இணங்க விமான நிறுவனங்கள் தங்களுடைய இணையதளங்களில் மாற்றம் செய்துள்ளது. ஏர் இந்தியா இணையதளத்தில் இருந்து தைவான் என குறிப்பிடுவதை நிறுத்தி சீன தைபேய் என்று குறிப்பிட்டுள்ளது.
சீனாவில் செங்காய் நிகரில் மட்டுமே ஏர்இந்தியா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. நிறுவனத்திற்கு சீன விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவு தொடர்பான கடிதத்தை வழங்கியுள்ளது. இணையதளத்தில் மாற்றங்களை மேற்கொள்ள ஏர் இந்தியாவிற்கு ஜூலை 25 வரையில் அவகாசம் வழங்கப்பட்டது. இதுவரையில் ஏர் இந்தியாவும், அமெரிக்காவின் விமான நிறுவனங்களும் தைவான தனி பிரதேசம் என்றே தங்களுடைய இணையதளங்களில் குறிப்பிட்டுவந்தது. இப்போது, இதனால் விளைவுகளை சந்திக்க நேரிடும், சீனாவின் சைபர் க்ரைம் நிர்வாகம் விமான நிறுவனங்களின் இணையதளத்தை சீனாவில் முடக்கும் என அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கையை விடுத்தது. இதனையடுத்து இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் இந்திய அரசிடம் எழுப்பப்பட்டதா என்ற கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை.
தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. தைவான் அதிபராக அதிபர் ட்ஸாய் இங்-வென் 2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் இவ்விவகாரத்தில் சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும் தென் சீனக்கடல் பகுதியையும் முழுவதுமாக சீனா உரிமை கொண்டாடி அங்கு ராணுவ தளவாடங்களை குவித்து வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தைவானுடன் இருந்த தூதரக உறவுகளை கடந்த 1979-ம் ஆண்டில் முறித்துகொண்டபோதிலும் தைவான் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்க போர் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தநிலையில், தைவானில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை அமெரிக்கா சமீபத்தில் திறந்தது. அமெரிக்கா - தைவான் பயிலகம் என இருந்த கட்டிடத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த தூதரகத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் என பெயரிடப்பட்டுள்ளது. தைவானில் அமெரிக்க தூதரகம் திறந்ததற்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.