ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்

நாடு முழுவதும் 80-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து நிறுவனங்களை கடந்த 2022-ம் ஆண்டு டாடா குழுமம் வாங்கியது. தொடர்ந்து அதே பெயரில் இயங்கி வரும் இந்த விமானங்கள், உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றன. இதில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் 200-க்கு மேற்பட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்து திடீரென உடல்நலக்குறைவு விடுப்பு எடுத்து போராட்டத்தில் இறங்கினர். விமான நிறுவனத்தின் தவறான நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.இது விமான போக்குவரத்தை கடுமையாக பாதித்தது. விமானிகள் உள்ளிட்ட ஊழியர்கள் திடீரென விடுப்பு எடுத்ததால் கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவானது.

இதனால் நாடு முழுவதும் 80-க்கு மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இவை பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட இருந்தவை ஆகும். கடைசி நேரத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டெல்லி, பெங்களூரு, கோழிக்கோடு உள்பட நாட்டின் பல விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பாதுகாப்பு சோதனை அனைத்தும் முடித்து விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டதால் அவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது

விமான போக்குவரத்தில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட இந்த தடங்கலுக்காக பயணிகளிடம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிர்வாகம் மன்னிப்பு கோரியது.மேலும் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயண கட்டணம் முழுமையாக திரும்ப அளிக்கப்படும் எனவும், விரும்பும் பயணிகளுக்கு மற்றொரு நாளில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள், 2- வது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 30 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கேபின் குழு ஊழியர்கள் மேலும் சிலர் பணி நீக்கம் செய்யப்படலாம்  என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com