

புதுடெல்லி,
சவுதி அரேபியாவுக்கான ‘ஏர் இந்தியா’ விமான சேவைகள் 20-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன.
ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த புதன்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விமான கேப்டன் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த பயணிகள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே சவுதி அரேபியாவுக்கான விமான சேவையை இந்திய விமான நிறுவனங்கள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. அந்த வகையில் சவுதி அரேபியாவுக்கான விமான சேவை வரும் 17-ந்தேதி(நாளை) வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ‘ஏர் இந்தியா’ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘ஏர் இந்தியா’ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவின் ரியாத், ஜெட்டா மற்றும் தம்மாம் ஆகிய விமான நிலையங்களுக்கான ‘ஏர் இந்தியா’ விமான சேவைகள் வரும் 20-ந்தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான பயணத்திற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என ‘ஏர் இந்தியா’ தெரிவித்துள்ளது.
அதேபோல், சவுதி அரேபியாவுக்கு வரும் 24-ந்தேதி வரை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ‘இண்டிகோ’ நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ‘ஆகாசா ஏர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரத்திற்கான விமான சேவைகள் வரும் 24-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும், ஜெட்டா நகருக்கான விமான சேவைகள் வரும் 21-ந்தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.