ஆமதாபாத் விமான விபத்து: அடையாளம் காணப்பட்ட விஜய் ரூபானியின் உடல்

டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 230 பயணிகள், 2 விமானிகள் மற்றும் 10 பணியாளர்கள் என 242 பேருடன் கடந்த 12-ந்தேதி லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியாவின் போயிங் 787 வரிசை விமானங்களில் ஒன்றான இந்த விமானம், சில நிமிடங்களில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர். இறந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சோகத்தை கூட்டி விட்டன.
மேலும் மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் இருந்த மருத்துவ மாணவர்கள் மற்றும் அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்தவர்கள் என பலரும் இந்த துயர சம்பவத்தில் சிக்கியதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமானப்போக்குவரத்து மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.
பிரதமர் மோடியும் நேற்று முன்தினம் ஆமதாபாத் சென்று விபத்து இடத்தை பார்வையிட்டதுடன், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்தில் பலியான முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கிடையே விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கொடூர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 274-ஐ எட்டியது. விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் 5 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உள்பட மேலும் 33 பேரும் இந்த பெரும் துயரில் சிக்கி உயிரிழந்து உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 270 உடல்கள் ஆமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு இதுவரை கொண்டு வரப்பட்டு உள்ளதாக பி.ஜே. மருத்துவக்கல்லூரி இளநிலை டாக்டர்கள் சங்க தலைவர் டாக்டர் தவால் கமெட்டி தெரிவித்திருந்தார்.
பலியானவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியதால் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்கள் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனிடையே டி.என்.ஏ. சோதனை செய்யாமலேயே நேரடியாக உறவினர்கள் அடையாளம் காட்டிய 8 உடல்கள் ஒப்படைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், "ஜூன் 12 ஆம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விபத்தில் முன்னாள் குஜராத் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை 11:10 மணியளவில் அவரது டி.என்.ஏ. பொருந்தி உள்ளது. அவர் பல ஆண்டுகளாக மாநில மக்களுக்காக உழைத்தார்..." என்றார்.
இதனையடுத்து விஜய் ரூபானியின் உடல் அவரது குடும்பதினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனைத்தொடர்ந்து ராஜ்கோட்டில் விஜய் ரூபானிக்கு இறுதிசடங்குகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
68 வயதான விஜய் ரூபானி, குஜராத்தின் முதல்-மந்திரியாக ஆகஸ்ட் 2016 முதல் செப்டம்பர் 2021 வரை இருந்தார். கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சி உட்பட குறிப்பிடத்தக்க காலகட்டங்களில் மாநிலத்தை வழிநடத்தினார். அமைதியான நடத்தை மற்றும் நிலையான நிர்வாகத் தலைமைக்கு பெயர் பெற்ற ரூபானி, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு பரவலாக மதிக்கப்பட்டார்.






