விமான விபத்தில் பாலிசிதாரர், வாரிசு மரணம்.. இழப்பீடு அளிப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறல்

பலியானோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
விமான விபத்தில் பாலிசிதாரர், வாரிசு மரணம்.. இழப்பீடு அளிப்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறல்
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக்கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ் மாணவர்களும், பொதுமக்கள் 24 பேரும் என 270 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது

இந்த சூழலில் ஆமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு அளிக்குமாறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, எல்.ஐ.சி. உள்பட முன்னணி காப்பீட்டு நிறுவனங்கள், இழப்பீடு வழங்கும் பணியை விரைவுபடுத்த ஆமதாபாத் அரசு மருத்துவமனையில் முகாம் அமைத்தன. அதிகாரிகள் அளித்த தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட குடும்பங்களை அணுகின.

ஆனால், பெரும்பாலான பாலிசிதாரர்கள், அவர்கள் மட்டுமின்றி, அவர்கள் வாரிசாக குறிப்பிட்டு இருந்தவர்களும் விமான விபத்தில் பலியாகி இருந்தனர். சிலர் குடும்பத்துடன் பலியாகி இருந்தனர். இதனால், காப்பீடாக அளிக்க வேண்டிய தொகையை யாருக்கு தருவது என்பதில் காப்பீட்டு நிறுவனங்கள் திணறி வருகின்றன. பலியானோரின் குழந்தைகளிடம் கூட்டாக வாக்குமூலம் பெற்று, தொகையை பகிர்ந்து அளிப்பது பற்றி காப்பீட்டு நிறுவனங்களின் வக்கீல்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com