ஏர் இந்தியா விமான விபத்து; மாணவ மாணவிகள் உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியீடு

துணிகளை கயிறு போல பயன்படுத்தி, விடுதியின் பால்கனி வழியே கீழே குதித்து, தரை பகுதிக்கு சென்று உயிர் தப்பினர்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து சமீபத்தில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 144 பேரின் டி.என்.ஏ. மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குஜராத், மராட்டியம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டையூவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தின்போது, விடுதியில் இருந்து மருத்துவ மாணவர்கள் சிலர் பால்கனி வழியாக குதித்து உயிர் தப்பிய புதிய வீடியோ வெளியாகி உள்ளது.
விமானம் மோதிய விடுதியில் இருந்த மாணவ மாணவிகள், விமான விபத்து பற்றி அறிந்ததும் உயிர் தப்புவதற்காக, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிலர் மேல் தளத்தில் இருந்து கீழ் தளத்திற்கு சென்றனர். ஒரு சிலர், கைகளில் கிடைத்த உடைகள் உள்ளிட்ட துணிகளை கயிறு போல பயன்படுத்தி, விடுதியின் பால்கனி வழியே கீழே குதித்து, தரை பகுதிக்கு சென்று உயிர் தப்பினர்.






