ஏர் இந்தியா விமான விபத்து; உயிர் தப்பியவர் காயங்களுடன் சகோதரர் உடலை தூக்கி சென்ற சோகம்

விபத்தில் சிக்கி, அனைவரும் பலியான நிலையில், விஷ்வாஸ் ஒருவர் மட்டும் எழுந்து நடந்து சென்ற வீடியோ வெளியானது.
டையூ,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று சமீபத்தில் புறப்பட்டு சென்றது. அது பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து உருக்குலைந்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்தவர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் (வயது 68) பலியானார்.
உயிரிழந்தவர்களின் உடல்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் டி.என்.ஏ. மாதிரிகள் உறுதி செய்யப்பட்டு, உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குஜராத், மராட்டியம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டையூவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான சிலரது உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபர் விஷ்வாஸ் குமார் ரமேஷ். காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்த பின்னர் அவர் வீடு திரும்பினார்.
அவருடன் லண்டனுக்கு பயணித்த சகோதரர் அஜய் விபத்தில் உயிரிழந்த நிலையில், டி.என்.ஏ. மாதிரி பரிசோதனையில் அவருடைய அடையாளம் உறுதி செய்யப்பட்டு, அவருடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, இங்கிலாந்தில் இருந்து விஷ்வாஸ் குடும்பத்தினர் இந்தியா வந்தடைந்தனர்.
சகோதரரின் உடலை, காயங்களுக்கு கட்டுப்போட்ட நிலையில் இருந்த விஷ்வாஸ் தோளில் தூக்கி சென்றார். அப்போது, அவர் கதறி அழுதபோது சுற்றியிருந்தவர்களும் கண் கலங்கி விட்டனர். உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து சென்றனர்.
விபத்தின்போது, அனைவரும் பலியான நிலையில், விஷ்வாஸ் ஒருவர் மட்டும் எழுந்து நடந்து சென்றுள்ளார். இந்த வீடியோ வெளியானது. அவர் நடந்து சென்று, சகோதரரை தேடியுள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரான சதீந்தர் சிங் சந்து இதனை பார்த்து அவரை தடுத்து நிறுத்தினார்.
விஷ்வாஸ் மார்பு, கால் உள்பட பல்வேறு இடங்களில் காயங்களுடன் காணப்பட்டார். அவரை உடனடியாக சந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டையூ பகுதியை சேர்ந்தவரான அவர், இங்கிலாந்தில் குடியேறி விட்டார். இந்நிலையில், டையூவில் உறவினர்களை பார்ப்பதற்காக சகோதரருடன் இந்தியாவுக்கு வந்திருந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.






