பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு

பெங்களூரு சில்க் போர்டு ஜங்ஷன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காற்று தரக்குறியீடு 125 ஆக பதிவாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. அதுவும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தான் காற்று மாசு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. இதுபற்றி கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு சில்க் போர்டு ஜங்ஷன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் காற்று தரக்குறியீடு 125 ஆக பதிவாகி உள்ளது.
ஆனால் காற்று தரக்குறியீடு 63 புள்ளிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மீறினால் காற்றின் தரம் குறைந்து, மாசு ஏற்பட்டதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சுவாச பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சில்க் போர்டு ஜங்ஷனில் காற்றின் தரக்குறியீடு 125 ஆக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அடுத்ததாக காற்றின் தரக்குறியீடு பீனீயாவில் 73 ஆகவும், மெஜஸ்டிக் பஸ் நிலைய பகுதியில் 93 ஆகவும், கஸ்தூரி நகரில் 68 ஆகவும், மைலசந்திராவில் 72 ஆகவும் பதிவாகி இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.






