டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும் அவதி

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு-மக்கள் கடும் அவதி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்ல, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கிறபோது ஏற்படுகிற புகையும் டெல்லிக்கு காற்றில் கடும் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.இந்த புகையின் மூலம் காற்றில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு ஆகியவை கலக்கின்றன.

காற்றில் மாசு அதிகரிப்பதால், அதன் தரம் குறைந்து கொண்டே போகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி ஏர் குவாலிட்டி இண்டெக்ஸ் என்று அழைக்கப்படுகிற காற்று தர சுட்டெண் 377 ஆக இருந்தது. நேற்று முன்தினம் இது 343 - ஆக இருந்தது. (காற்று தர சுட்டெண் 251-350 வரையில் இருக்கிறபோது காற்றின் தரம் மோசம் என்று அர்த்தம்). காற்று தர சுட்டெண் 50 என்ற அளவில் இருந்தால்தான் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமைதியான காற்றும், குறைந்த வெப்ப நிலையும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு துணை நிற்கின்றன.

டெல்லியில் காற்றின் தரம் மோசமாகி வருவது பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. வாகனங்கள் ஓட்டுவதும் சவாலானதாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மரம், செடி கொடிகளை அதிகளவில் நடுவது காற்று மாசை கட்டுப்படுத்த கொஞ்சம் உதவும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com