ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கும், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் டெல்லி தனிக்கோர்ட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி முன்ஜாமீன் வழங்கியது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை இயக்குனரகம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த மேல்முறையீடு, நீதிபதி அனு மல்கோத்ரா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை இயக்குனரகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் அமித் மகாஜன், மல்லிகா ஹயர்மாத் ஆகியோர் இதில் பதில் மனு தாக்கல் செய்ய ப.சிதம்பரத்துக்கும், கார்த்தி சிதம்பரத்துக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் 11-ந்தேதி ஐகோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தும், அவர்கள் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தனர்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் தயான் கிருஷ்ணனும், அர்ஷ்தீப் சிங்கும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அதைத் தொடர்ந்து ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு 3 வாரம் அவகாசம் அளித்து நீதிபதி அனு மல்கோத்ரா உத்தரவிட்டார்.

அந்த பதில் மனு மீது அமலாக்கத்துறை இயக்குனரகம் பதில் தாக்கல் செய்ய விரும்பினால், அதன் பின்வரும் 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட விசாரணையை மே மாதம் 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com