

ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்குகளை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் அமர்வு விசாரித்து வருகிறது.
இதுதொடர்பாக கடந்த 22-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அமலாக்கத்துறை சார்பில் அரசு தரப்பு வக்கீல் என்.கே.மட்டா, சி.பி.ஐ. சார்பில் வக்கீல் நூர் ராம்பால் ஆஜராகி, கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து நீதிபதி நாக்பால், கோர்ட்டு எழுப்பிய கேள்விகளுக்கு சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதில் அளித்துள்ளன. முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் நவம்பர் 27-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டிசம்பர் 20-ந்தேதி ஆஜராக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிபதி நாக்பால் உத்தரவிட்டார்.