

புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டதாகவும் இதன் மூலம் அவரும் அவரது நிறுவனமும் பயனடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு விசாரிக்கிறது. இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்பிலான முதலீடு மற்றும் வங்கி இருப்பை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு தற்காலிகமாக முடக்கியது.
இதுகுறித்து பிஎம்எல்ஏ தீர்ப்பாயம் ஆய்வு நடத்தியது. ஏர்செல்-மேக்சிஸ் நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன என்று சட்ட விரோத பணப் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது. ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் கார்த்தி சிதம்பரம் பயனடைந்ததற்கான ஆதாரம் இருப்பதாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இயங்கும் தீர்ப்பாய அதிகாரி துஷார் விஷா உத்தரவில் கூறிஉள்ளார்.
இந்த நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை நவம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கூறி உள்ளது.