5ஜி அலைக்கற்றைக்கு ரூ.8,312 கோடி:மத்திய அரசுக்கு ஏர்டெல் அளித்தது

5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததற்காக மத்திய அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் ரூ.8 ஆயிரத்து 312 கோடி அளித்தது.
5ஜி அலைக்கற்றைக்கு ரூ.8,312 கோடி:மத்திய அரசுக்கு ஏர்டெல் அளித்தது
Published on

புதுடெல்லி,

தற்போது, 4ஜி செல்போன் சேவை புழக்கத்தில் உள்ளது. அடுத்த தலைமுறையான 5ஜி செல்போன் சேவை பயன்பாட்டுக்காக, 5ஜி அலைக்கற்றையை கடந்த மாதம் மத்திய அரசு ஏலம் விட்டது.

மொத்தம் 72 ஆயிரத்து 98 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டது. அவற்றில் 51 ஆயிரத்து 236 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் ஏலம் எடுக்கப்பட்டது. இது, மொத்த அலைக்கற்றையில் 71 சதவீதம்.

இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி கிடைக்கும். ஜியோ நிறுவனம் ரூ.88 ஆயிரத்து 78 கோடிக்கும், பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.43 ஆயிரத்து 48 கோடிக்கும், வோடபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18 ஆயிரத்து 799 கோடிக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடிக்கும் ஏலம் எடுத்தன. இந்தநிலயில், ஏர்டெல் நிறுவனம், தான் ஏலத்தில் எடுத்த 5ஜி அலைக்கற்றைக்கு ரூ.8 ஆயிரத்து 312 கோடியே 40 லட்சத்தை மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு அளித்துள்ளது.

4 ஆண்டு பயன்பாட்டுக்கான அலைக்கற்றைக்கு உரிய தொகையை ஏர்டெல் நிறுவனம் முன்கூட்டியே செலுத்தி உள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிர்வாக இயக்குனர் கோபால் விட்டல் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், எதிர்கால பண வரவு-செலவு சீராக நடக்கும்.

அதனால், 5ஜி செல்போன் சேவையை அமல்படுத்துவதில் நாங்கள் முழு கவனத்துடன் செயல்பட முடியும். உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவையை கொண்டு வருவதில் ஆர்வமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com