

மும்பை,
மராட்டியத்தில் முதல்-மந்திரி பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசில், 2 துணை முதல்-மந்திரிகள் பதவியில் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஏக்நாத் ஷிண்டே. மற்றொருவர் அஜித் பவார். மராட்டியத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் நேற்று காலை புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது. முன்னதாக விமானத்தை விமானி சுமித் கபூர், துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர். பணிப்பெண் பிங்கி மாலி, அஜித்பவாரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
விமானம் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியதும் அங்கு தரையிறங்க முயற்சி செய்தது. ஆனால் திடீரென காலை 8.45 மணிக்கு விமானம், ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி சென்றது. அப்போது விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த விமானம், பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது. தரையில் விழுந்தவுடன் விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது
சத்தம்கேட்டு அந்தப்பகுதியில் இருந்தவர்கள் உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் நெருங்க முடியாத அளவுக்கு விமானத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. இதனால் விமானத்தில் சிக்கியவர்களுக்கு பொதுமக்களால் உடனடியாக எந்த உதவியும் செய்ய முடியவில்லை. எனவே சம்பவம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் விமானத்தில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.
மீட்பு பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது தான், அது அஜித்பவார் வந்த விமானம் என்ற தகவல் பரவி மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. விமானத்தில் உடல் கருகிய நிலையில் கிடந்த அஜித்பவார் உள்ளிட்ட 5 பேரை மீட்டு ஆம்புலன்சில் பாராமதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் நடத்திய சோதனையில் அஜித்பவார் உள்பட விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.
அஜித்பவாரின் திடீர் மறைவு கட்சி வேறுபாடு இன்றி மராட்டிய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரது சொந்த ஊரான பாராமதி சோகத்தில் மூழ்கியது. மரணம் அடைந்த அஜித்பவாருக்கு வயது 66. இவர் 6 முறை துணை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். இவரது மனைவி பெயர் சுனேத்ரா பவார். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அஜித்பவாருக்கு பார்த் பவார், ஜெய் பவார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
துணை முதல்-மந்திரி அஜித்பவார் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
அஜித்பவார் மறைவையொட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் நேற்று அரசு விடுமுறை விடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மாலை 5 மணிக்கு அஜித்பவாரின் உடல் பாராமதியில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் அஜித்பவாரின் உடலுக்கு இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் இன்று (வியாழக்கிழமை) காலை பாராமதியில் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மராட்டிய முதல்- மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.