பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

அஜித் பவாரின் விமானத்தை விமானி சுமித் கபூர், பெண் துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர்.
பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று முன்தினம்(28-ந்தேதி) பயணம் செய்தார். அந்த விமானத்தை விமானி சுமித் கபூர், துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர். மேலும் விமான ஊழியர் பிங்கி மாலி, அஜித்பவாரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ் உள்பட 5 பேர் விமானத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், விமானம் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியதும் அங்கு தரையிறங்க முயற்சி செய்தது. ஆனால் திடீரென காலை 8.45 மணிக்கு விமானம், ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி சென்றது. அப்போது விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த விமானம், பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது. தரையில் விழுந்தவுடன் விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். அஜித்பவாரின் திடீர் மறைவு கட்சி வேறுபாடு இன்றி மராட்டிய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரது சொந்த ஊரான பாராமதி சோகத்தில் மூழ்கியது. அஜித் பவாரின் உடல் நேற்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பழைய பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “நாம் ஹெலிகாப்டர் அல்லது விமானத்தில் பயணிக்கும்போது, ​​அது சீராக தரையிறங்கினால், அந்த விமானி ஒரு பெண் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்” என்று பதிவிட்டிருந்தார்.

விபத்திற்குள்ளான அஜித் பவாரின் விமானத்தை விமானி சுமித் கபூர், பெண் துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர். இதில் சாம்பவி பதக், நியூசிலாந்து சர்வதேச அகாடமியில் விமானியாக பயிற்சி பெற்றவர் ஆவார். அவர், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (DGCA), விமானப் போக்குவரத்து பைலட் உரிமத்தைப்(ATPL) பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com