

மும்பை,
மராட்டிய மாநிலத்தின் மறைந்த துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மகன் ஜெய பவார் விஎஸ்ஆர் வென்ச்சர் விமானத்தின் உரிமையாளர் ரோஹித் சிங் பயணத்தின்போது தலைமை விமானியின் இருக்கையில் தூங்கி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக ஜெய பவார் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
எங்கள் தந்தையை இழந்துள்ளோம். இந்த வலி வாழ்நாள் முழுவதும் எங்களுடன் இருக்கும். இந்த வீடியோவில், விஎஸ்ஆர் உரிமையாளர் ரோஹித் சிங், விமானத்தின் போது தலைமை விமானியின் இருக்கையில் தூங்குவதைக் காணலாம். விமானம் பறந்து கொண்டிருக்கும் இதுபோன்ற அலட்சியம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த விஷயத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமையான விசாரணை நடத்தப்படும் வரை அனைத்து விஎஸ்ஆர்.விமானங்களும் உடனடியாக தரையிறக்கப்பட வேண்டும், மேலும் ரோஹித் சிங் தாமதமின்றி கைது செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இது ஒரு மகனின் வேதனையான வேண்டுகோள்..என் தந்தைக்காகவும், ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பிற்காகவும் நான் இதைக் கேட்கிறேன் என அதில் கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில்,
எனது தந்தை அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டது. அதில்,
விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.
பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது. இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து அறிக்கை விரிவாகவும் முழுமையாகவும் இல்லாததால் எனக்கு வேதனையும் ஏமாற்றமும் ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், விஎஸ் ஆர் வென்ச்சர்ஸின் முழு செயல்பாடுகளையும் நிறுத்துவது குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சிந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
ஜெய பவாரின் பதிவு இணையத்தில் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அஜித் பவாரின் மறைவு மகாராட்டிர அரசியலில் பேரிழப்பாகக் கருதப்படும் நிலையில், அவரது மகனின் இந்த துணிச்சலான வெளிப்பாடு விமானப் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான விவாதத்தை தூண்டியுள்ளது.