

கவுகாத்தி,
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாமில் நடந்து வரும் போராட்டங்களை அசாம் மாணவர் சங்கம் (ஆசு) முன்னின்று நடத்தி வருகிறது. இந்த சங்கத்தினர் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக, தலைநகர் கவுகாத்தியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய பாடகர் ஜுபீன் கார்க், நாங்கள் சொந்தமாக கட்சி தொடங்க உள்ளோம் என்று கூறினார். அடுத்ததாக பேசிய ஆசுவின் தலைவர் திபங்கா நாத்தும் இதை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மாநிலத்தில் பா.ஜனதா, அசாம் கணபரிஷத் கட்சிகளுக்கு மாற்றாக கட்சி ஒன்றை தொடங்குவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளோம். இது தொடர்பாக கலைஞர்கள் மன்றத்துடன் பேசி வருகிறோம். மக்கள் அனுமதியுடன் கட்சி தொடங்குவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்று கூறினார்.
மாநில மக்களின் நலனுக்காக கலைஞர்கள் மன்றத்துடன் இணைந்து கட்சி தொடங்க தயாராக இருப்பதாக கூறிய திபங்கா நாத், பா.ஜனதா, அசாம் கணபரிஷத் கட்சிகளை கடுமையாக சாடினார்.